×
 

கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகை வழங்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச அரசு பேருந்து பயணத் திட்டமான ‘பிரியதர்ஷினி’ இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநில சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்.) அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்தத் திட்டம் இடம்பெற்றிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாநில அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் சதீசன் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிரியதர்ஷினி’ திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரள அரசு போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி. (KSRTC) இயக்கும் குறிப்பிட்ட வகை சாதாரண பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

பயணிகளுக்கு எளிதில் அடையாளம் காணும் வகையில், திட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் சிறப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளன. சாதாரண அரசு பேருந்துகள், நகரப் பேருந்துகள், வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களைக் கொண்ட சாதாரண சேவைகள், சீர்நிலை சாதாரண பேருந்துகள், டவுன் டூ டவுன் சேவைகள், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகள் மற்றும் கிராமவாண்டி சேவைகள் உள்ளிட்ட ஏழு வகை பேருந்துகளில் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: "நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை": தமிழக எல்லையில் தீவிரக் கண்காணிப்பு!

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாடப் பயணச் செலவைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் பயன்பெறுவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகளின் சமூகச் சேர்க்கை மற்றும் சுயநிறைவை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் பெண்களுக்கு இலவச அல்லது சலுகை கட்டணப் பயணத் திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், கேரள அரசும் அதேபோன்ற மக்கள் நலத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சி பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதுடன், குடும்பங்களின் மாதாந்திர செலவுச் சுமையையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share