×
 

அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வரும் மே மாதம் முழுவதும் விடுமுறை அளித்துத் தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை தமிழக அரசாணையில் வெளியிட்டுள்ள நிலையில் கூறியுள்ளதாவது, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை மொத்தம் 31 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 15 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஊழியர்களின் கோரிக்கை மற்றும் வெயிலின் உக்கிரம் காரணமாக இந்த ஆண்டு முழு மாதமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிக்கப்படாமல் இருக்க, முன்பருவக் கல்வி பயிலும் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு (THR), விடுமுறை தொடங்குவதற்கு முன்னரே வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு 50 கிராம் வீதம், 15 நாட்களுக்குத் தேவையான 750 கிராம் சத்துமாவு முன்கூட்டியே வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகள் தொய்வின்றி நடக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சுழற்சி முறையில் மாற்றுப் பணிகளை மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் மையங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS) இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 31 நாட்கள் விடுமுறை வழங்கக் கோரி ICDS இயக்குநர் அளித்தப் பரிந்துரையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share