"விநாயகர் சதுர்த்தி விழா".. களைகட்டிய சந்தைகள்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தைகளில் அமோக விற்பனை நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது முதன்மையாக விநாயகர் எனப்படும் கணபதியை வணங்கி கொண்டாடப்படுகிறது. விநாயகர், ஞானத்தின் கடவுள், தடைகளை நீக்குபவர், செல்வத்தையும் வெற்றியையும் அருள்பவர் என இந்து புராணங்களில் போற்றப்படுகிறார்.
இந்த விழா ஆவணி மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரும் சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது, பொதுவாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் அமைகிறது. இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த விழா பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியின் தோற்றம் புராணக் கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பல நாட்கள் நீடிக்கும். இந்த விழாவின் முக்கிய அம்சம், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளிலோ, பொது இடங்களிலோ பிரதிஷ்டை செய்து வணங்குவது ஆகும். இந்த சிலைகள் சிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவு வரை இருக்கும். மகாராஷ்டிராவில், புனே மற்றும் மும்பை போன்ற நகரங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பொது மண்டபங்களில் வைக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விழாவின் முதல் நாளில், சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முன், புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி, பூஜைகள் செய்கின்றனர்.
இதையும் படிங்க: பாங்காக்: மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 பேரை கொன்று தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர்..!
இதன்பின், பக்தர்கள் மலர்கள், மோதகம், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை விநாயகருக்கு படைத்து வணங்குகின்றனர். மோதகம் என்பது விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பாக கருதப்படுகிறது.வீடுகளில் விநாயகர் சதுர்த்தி எளிமையாகவும் ஆன்மீகப் பொலிவுடனும் கொண்டாடப்படுகிறது. வீட்டில் ஒரு சிறிய மேடை அமைத்து, விநாயகர் சிலையை வைத்து, அலங்காரம் செய்யப்படுகிறது. தினமும் பூஜைகள், ஆரத்தி, பஜனைகள் நடைபெறும். சிலர் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் அல்லது பத்து நாட்கள் வரை விநாயகரை வணங்கி, பின்னர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பார்கள். இந்த நிகழ்வு ‘விசர்ஜனம்’ என்று அழைக்கப்படுகிறது,
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முன் ஏற்பாடுகளை மக்கள் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாநில முழுவதும் சந்தைகள் கலை கட்டின. பூ, பழங்கள், தோரணங்கள், பொறி உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்... கோவை அரசு மருத்துவமனையில் வட மாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை