மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!
அநியாயமான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டருக்கு ரூ.29 அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை ஜூன் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எல்பிஜி விநியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், இறக்குமதி செலவுகள் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் எரிவாயு விலைகள் மறுபரிசீலனை செய்யப்படுவது வழக்கம். தமிழகத்தில் ஜூன் 1 வரை 14.2 கிலோ சிலிண்டர் ரூ.928.50-க்கு கிடைத்து வந்த நிலையில், தற்போது ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.942, மும்பையில் ரூ.941.50 மற்றும் கொல்கத்தாவில் ரூ.968 என புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த உயர்வு பல்வேறு மாநிலங்களில் சமையல் செலவை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் எண்ணெய் நிறுவனங்களின் செலவினங்களை அதிகரித்துள்ளன. இதனால் உள்நாட்டு எரிவாயு விலைகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இதே சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டிருந்தது. அதாவது மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக போராடிய காங்கிரசார்..! செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு..!
ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், இந்த புதிய உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவினத்தை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. குறிப்பாக நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கூடுதல் சுமை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என மக்கள் தவிக்கும் போது இந்த உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது. அச்சே தின் என்று வாக்குறுதி அளித்தவர்கள் இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை சிரமப்படுத்துகின்றனர்.
இந்த அநியாயமான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த விலை உயர்வு பொருளாதார ரீதியாக பலவீனமான தரப்பினருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அரசு மக்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!