திக்.. திக்...!! - மெல்ல, மெல்ல ஸ்தம்பிக்கும் தமிழகம்... நாளை முதல் இவையெல்லாம் இயங்க வாய்ப்பே கிடையாது...!
சமீப நாட்களில் எல்.பி.ஜி. (LPG) கேஸ் சிலிண்டர்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக பல துறைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள பதற்றமான போர் சூழ்நிலை உலகளாவிய எரிவாயு சந்தையையே பாதித்து வருகிறது. அந்த தாக்கம் இந்தியாவையும், குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தையும் எட்டியுள்ளது. சமீப நாட்களில் எல்.பி.ஜி. (LPG) கேஸ் சிலிண்டர்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக பல துறைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களிலும், புறநகர பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பல ஆட்டோக்கள் பெட்ரோல் அல்லது டீசலுக்குப் பதிலாக எல்.பி.ஜி. வாயுவை பயன்படுத்தி இயங்குகின்றன. நெல்லை, கோவை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எல்.பி.ஜி. கேஸ் நிலையங்கள் மூடப்படுவதால், தற்போது கேஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சிலர் அதிக விலைக்கு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களின் தினசரி வருமானமும் குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் கேஸ் சிலிண்டர்களின் தட்டுப்பாடால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தற்போது நெல்லை உடையார்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் ஆட்டோ எல்பிஜி கேஸ் நிரப்பும் நிறுவனம் மூடப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!
இதற்கிடையில் பேக்கரி மற்றும் ஓட்டல் துறைகளும் கடுமையான தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. தினசரி அதிக அளவில் கேஸ் பயன்படுத்தும் பேக்கரிகள், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் ஆகியவை தற்போது கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் செயல்பாட்டில் சிக்கலை சந்திக்கின்றன. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஓட்டல்களில் 40 உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 20 உணவுப் பொருட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஓட்டல்களில் இன்னும் 24 மணி நேரம்தான் சிலிண்டர் பயன்பாடு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக எரிவாயு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், சேலத்தில் உள்ள பிரபல உணவகங்களில் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புக்கான கட்டுமான பணிகளை மீள் உருவாக்கம் செய்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் சொற்ப அளவிலான கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே இருப்பதால், தோசை, டீ, சாப்பாடு போன்ற சில உணவு வகைகளை நிறுத்தி திட்டமிட்டுள்ளதோடு, சில நாட்களுக்குப் பிறகு உணவகங்களை மூட திட்டமிட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறங்களில் 70க்கும் மேற்பட்ட பெரிய சிறிய உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன. உதகையில் நேற்றைய தினம் வணிக சிலிண்டர் 100% வினியோகம் செய்யபட்ட நிலையில் இன்று அது 50% குறைந்து உள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்ட நிலையில் உணவகங்களில் சில உணவுப் பொருட்களும் உற்பத்தி நிறுத்தபட உள்ளது. கேஸ் தட்டுப்பாடு எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருப்பதாகவும் வரும் நாட்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டால் உணவகங்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் இந்த தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சிறு உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள கேஸ் மீது அதிகமாக சார்ந்துள்ளதால், சில இடங்களில் உற்பத்தி வேகம் குறைந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் மாற்று எரிபொருளாக விறகின் தேவை திடீரென அதிகரித்துள்ளது. பல ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் தற்காலிகமாக விறகை பயன்படுத்தி சமையல் செய்யத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக விறகு விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சில இடங்களில் விறகின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பு தினமும் குறைந்த அளவில் விறகு விற்பனை நடந்த இடங்களில் கூட தற்போது அதிகமான தேவை உருவாகியுள்ளதாக விறகு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். திடீரென விறகுற்கு கூடிய மவுசு காரணமாக ஒரு டன்னுக்கு ஆயிரம் முதல் 1500 வரையில் உயரும் நிலை உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
எனினும் விறகை அதிக அளவில் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் புகை மாசு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பதால், இது நீண்டகால தீர்வாக இருக்க முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் எரிவாயு விநியோகத்தை சீராக செய்ய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பினரிடமிருந்து எழுந்துள்ளது.
மொத்தத்தில், உலக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பதற்றம் எரிவாயு விநியோகத்தை பாதித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் வரை பல துறைகள் நேரடி தாக்கத்தை சந்தித்து வருகின்றன என்பது தெளிவாகிறது. இதற்கிடையில் விறகு போன்ற மாற்று எரிபொருட்களின் தேவை அதிகரித்திருப்பதும் இந்த நெருக்கடியின் மற்றொரு வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றம்... உடனே போனை செக் பண்ணுங்க... HPCL வெளியிட்ட முக்கிய மெசெஜ்...!