வெடிக்கும் வீரமணி விவகாரம்..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் கூடாது... காவல்துறை ஆட்சேபம்.!
ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்கனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த வழக்கில் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் வீரமணியுடன் சேர்த்து அவரது உதவியாளராக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தேனாம்பேட்டையில் வீரமணி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் நிர்வாகப் பொறுப்பை இந்தத் தம்பதி வகித்து வந்ததாகவும், அங்கு சிறுமிகளை அழைத்து வந்து வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.ஆகஸ்ட் மாதம் இறுதியில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்குப் பிறகு சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில் தங்களுக்கு எந்தக் குற்றமும் இல்லை என்றும், வழக்குப் பதிவு தாமதமாக நடந்தது என்றும், சான்றுகள் ஏற்கனவே காவல்துறையிடம் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.இருப்பினும் காவல்துறை தரப்பில் இந்த ஜாமீன் மனுக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சாந்தி தம்பதியிடம் மேலும் விரிவான விசாரணை தேவைப்படுவதாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... 8 மணி நேரத்தில் 200 கேள்விகள்... சாந்தி, சிம்கனை துருவியெடுத்த போலீஸ்...!
அவர்கள் சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து வருவதிலும், குற்றங்களுக்கு உதவுவதிலும், சான்றுகளை அழிக்க முயற்சிப்பதிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்தது.போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்படி இருவரும் சிறையிலிருந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!