ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி..! சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!
வீரமணி வழக்கில் கைதாகியுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ஜெம் குழுமத் தலைவரும் கிரானைட் தொழிலதிபருமான வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவிடம் ரகசிய புகார் அளித்தார். அதில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் ஒன்று ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி என்பது விசாரணையில் தெரியவந்தது. வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் நிர்வாகப் பொறுப்பை சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு உதவியாக இருந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டினர்.
முதலில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறி வழக்கை முடிக்க போலீசார் முயன்றனர். ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பின்னர் விசாரணை தீவிரமடைந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பல சிறுமிகள் இதேபோல் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆகஸ்ட் மாதம் இறுதியில் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். பின்னர் வீரமணியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் மீதான விசாரணையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: மனதை உலுக்கும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! தீவிர விசாரணை... சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் கேட்டு மனு..!
வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்களிடம் மேலும் விசாரணை தேவைப்படுவதாகவும், இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு காலம் இக்குற்றம் நடைபெற்று வந்தது, வேறு யார் தொடர்புடையவர்கள் என்பதை அறிய வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த மனுவை ஏற்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.இதற்கிடையே சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கு எந்த குற்றமும் இல்லை என்றும், கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும் போலீஸ் காவலில் எடுக்காதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஜெம் வீரமணி வழக்கில் கைதான சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள் சாந்தி மறைவு! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!