×
 
☰

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சரிந்து விழுந்த ராட்சத பாறை.. போக்குவரத்து முடக்கம்!!

இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட ராட்சத பாறை சரிவு, மலைப்பகுதியின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயத்தை அதிகரித்துள்ளது.

நேற்று மாலை முதல் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இத்தகைய சூழலில், வால்பாறை மலைப்பாதையின் முக்கியப் பகுதியில் ராட்சத பாறை ஒன்று சரிந்தது. 

இந்த மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை அடிவாரத்திலிருந்து தொடங்கும் முதல் வளைவுக்கு அருகே, இரண்டாவது வளைவிலிருந்து உருண்டோடி வந்த பாறை, முதல் வளைவில் விழுந்து சாலையை முழுவதுமாக அடைத்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது அதிர்ஷ்டம்.

இதையும் படிங்க: சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

பாறை விழுந்த வேகத்தில் சாலை பலத்த சேதமடைந்தது. ஒரு மோட்டார் சைக்கிள் கூட கடக்க முடியாத அளவுக்கு பாறை ரோட்டில் குறுக்கிட்டுக் கிடந்தது. இதனால் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கியது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராட்சத அளவுடைய பாறையை உடனடியாக அகற்ற இயலாததால், இன்று காலையில் அதை உடைத்து அகற்றும் பணி தொடங்கியது. பல மணி நேர உழைப்பிற்குப் பிறகு பாறை அகற்றப்பட்டாலும், சேதமடைந்த சாலையை சீரமைத்த பின்னரே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துண்டிப்பால் வால்பாறைக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவசர சூழலில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல இயலாமல் போனது. வால்பாறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பதால் இன்று பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சுற்றுலாப் பயணிகள் பலர் வால்பாறையிலேயே முடங்கிக் கிடந்தனர். இன்று மாலைக்குள் நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share