King of Injustice! அநீதியின் அரசர்! ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்பின் நிர்வாண சிலை!!
டிரம்ப்பின் காலநிலை மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டதாக ஜென்ஸ் கால்ஷியோட் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான டிரம்ப் சிலை உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நிர்வாணமாக சித்தரித்து, 23 காரட் தங்க முலாம் பூசப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலைக்கு “The Orange Plague” என பெயரிடப்பட்டுள்ளது. இது “King of Injustice” என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பரபரப்பான பகுதியில் இந்த சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 முதல் 2.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஜென்ஸ் கால்ஷியோட் உருவாக்கியுள்ளார். சிலையில் டிரம்ப் நிர்வாணமாக, மிகவும் சிறிய உருவம் கொண்ட ஒரு மனிதரின் தோள்களில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது கையில் கோல்ஃப் கிளப்பும், நீதியின் தராசும் இடம்பெற்றுள்ளன.
சிலையின் அடிப்பகுதியில், “எனது சுமையால் ஒருவர் மூழ்கிக் கொண்டிருக்கிறார்; அவருக்கு உதவ நான் எதையும் செய்வேன். ஆனால் அவரது முதுகிலிருந்து இறங்க மாட்டேன்” என்ற பொருள்படும் நையாண்டி வாசகம் இடம்பெற்றுள்ளது. அதிகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதத்தை உருவாக்குவதே இந்தக் கலைப்படைப்பின் நோக்கம் என கலைஞர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!
டிரம்ப்பின் காலநிலை மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டதாக ஜென்ஸ் கால்ஷியோட் கூறியுள்ளார். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் “The Emperor’s New Clothes” கதையிலிருந்து இந்தப் படைப்புக்கு உத்வேகம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்காட்சிக்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர் கிளாசன் ஆதரவு அளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் கலைக்கண்காட்சிகளை நடத்த உறுப்பினர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, சிலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நாடாளுமன்றம் அதன் அரசியல் கருத்துகளை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கிறது என்பதைக் குறிக்காது.
இந்தச் சிலை அக்டோபர் 8 வரை ஸ்ட்ராஸ்பர்க்கில் காட்சியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் படைப்பு, அடுத்ததாக ஐ.நா. காலநிலை மாநாட்டிலும் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!