×
 

“சில்லறை தட்டுப்பாட்டுக்கு தீர்வு!” - ஏடிஎம்களில் ₹10, ₹20, ₹50 நோட்டுகளை வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்!

“ரூ. 500 நோட்டைச் செலுத்தினால் சில்லறை கிடைக்கும்” - மும்பையில் சோதனை ஓட்டம்; விரைவில் நாடு முழுவதும் அமல்!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், சாமானிய மக்கள் சந்திக்கும் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு ஒரு புரட்சிகரமானத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இனி ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ₹10, ₹20 மற்றும் ₹50 போன்ற சிறு ரூபாய் நோட்டுகளை எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட உள்ளது. தற்போதுள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் ₹500 மற்றும் ₹200 நோட்டுகளை மட்டுமே பிரதானமாக வழங்குகின்றன. இதனை மாற்றியமைக்க அரசு இரண்டு முக்கியத் திட்டங்களை வகுத்துள்ளது:

₹10, ₹20 மற்றும் ₹50 நோட்டுகளை மட்டும் வழங்கும் பிரத்யேகச் சிறிய ரக ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் உங்களிடம் உள்ள ₹500 நோட்டைச் செலுத்தினால், அதற்குப் பதிலாக ஐந்து ₹100 நோட்டுகளாகவோ அல்லது மற்றச் சிறு நோட்டுகளாகவோ சில்லறையாக மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கும்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது மும்பையில் மாதிரி இயந்திரங்கள்  கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, விரைவில் நாடு முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், காய்கறிச் சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வசதி கொண்டு வரப்படும்.

வரும் மார்ச் 31, 2026-க்குள் நாடு முழுவதும் உள்ள 90% ஏடிஎம்களில் குறைந்தபட்சம் ஒரு பெட்டியிலாவது ₹100 அல்லது ₹200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஜிட்டல் பரிவர்த்தனை எதிரொலி... நாடு முழுவதும் 2,300 ஏ.டி.எம்.கள் மூடல்..!

சாலையோர வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் பயணம் செய்பவர்கள் சில்லறை மாற்ற முடியாமல் படும் அவதிக்கு இந்தத் திட்டம் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகச் சிறிய மதிப்புள்ள நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share