திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
திருக்குறள் சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் வேரூன்றியது என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலங்களைக் கடந்து நிற்கிறது எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், திருவள்ளுவரின் ஞானம் மற்றும் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து ஆளுநர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மீக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. இது பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷம் ஆகும். திருக்குறள் என்பது சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றியது. இது காலம், சமூகம் மற்றும் சூழ்நிலைகளைக் கடந்து இன்றும் வழிகாட்டியாக நிற்கிறது.
இறைவனிடம் பக்தி செலுத்துவதை உறுதிப்படுத்திய வள்ளுவர், குடிமக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகிய இருவருக்குமான நீதிசார்ந்த நடத்தை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு நீடித்த அடித்தளத்தை அமைத்துள்ளார். இன்றைய உலகளாவிய மோதல்கள் மற்றும் பிளவுகளுக்கு மத்தியில், திருக்குறளின் கருத்துகள் புதுப்பிக்கப்பட்ட அவசர முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. திருவள்ளுவரின் தீவிர பற்றாளரான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வள்ளுவரின் குறள்களை நெறிசார்ந்த உலகுக்கான வழிகாட்டும் சக்தியாக நிலைநிறுத்தி, உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.
இதையும் படிங்க: நீங்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும்..!! பிரதமர் மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து..!!
தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ஆழமான பக்திச் சிரத்தையுடன் தேசம் சிரம் பணிந்து மரியாதை செலுத்துகிறது என ஆளுநர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து திருவள்ளுவரை ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் முன்னிறுத்தி வரும் நிலையில், இன்றைய அவரது செய்தியும் அரசியல் மற்றும் ஆன்மீக தளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0ல் மகிழ்ச்சி பொங்கல் பன்மடங்காகும்..!! முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!