ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்! "ரெங்கா ரெங்கா" முழக்கத்துடன் வடம் பிடித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “ரெங்கா, ரெங்கா” என பக்தி கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், "பூலோக வைகுண்டம்" என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், சித்திரை தேரோட்டம் இன்று வெகு விமரிசையாகத் தொடங்கியது. பக்திப் பெருக்குடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, அதிகாலை முதலே நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர்.
திருத்தேர் நான்கு வீதிகளிலும் வலம் வரும் நிலையில், பக்தர்கள் "ரெங்கா, ரெங்கா" என எழுப்பிய பக்தி கோஷம் விண்ணைப் பிளந்தது. நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரை, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை தடை! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சித்திரை தேரோட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நம்பெருமாளின் அருளைப் பெறக் காத்துக்கிடக்கும் பக்தர்களின் கூட்டத்தால் நான்கு வீதிகளும் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 31 பேர் உயிரிழப்பு! மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவு!