×
 

பேரதிர்ச்சியில் தமிழக அரசு... மின்வாரிய அலுவலகத்திற்குள் நடந்த பகீர் சம்பவம்... ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள்...!

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், அதாவது வார இறுதி நாட்களில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சுருக்கென வார்த்தையை விட்ட சுகராஜ்... கணவனை தோசைக்கல்லால் அடித்து ஜோலியை முடித்த மனைவி...!

அன்று அலுவலக ஊழியர்கள் கணினிகளில் பணியாற்றியபோது சேமிப்பு வசதி செயல்படாததை கவனித்து, சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரை தொடர்புகொண்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 கணினிகளில் இருந்த ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

முதற்கட்டமாக அலுவலக நிர்வாகம் உள்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்காததால், உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஹார்ட் டிஸ்க்களில் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல் விவரங்கள், மின் உபகரணங்கள் மற்றும் ஸ்விட்ச் போர்டுகள் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் ஆவணங்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் அளிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், விசாரணைக்காக சிசிடிவி ஆதாரங்களை கோரிய நிலையில், அந்த சிசிடிவி பதிவுகள் சேமிக்கப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க்களும் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பல சிசிடிவி கேமராக்கள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், அவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் உள்துறை நபர்களின் தொடர்பு உள்ளதா, உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சிஸ்டம் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையின் அடுத்தகட்ட முன்னேற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனிக்கட்சியா? பாஜகவா?... இறுதி முடிவெடுத்த அண்ணாமலை... நாளை வெளியாகிறது அறிவிப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share