பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!
கோவையில் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணிகளை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 32 வயதான மணிவேந்தன், கோவை மாநகர காவல்துறையின் போத்தனூர் விசாரணை பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர் வேலை விஷயமாக பொள்ளாச்சிக்குச் சென்றிருந்தார்.
பின்னர் அங்கிருந்து கோவைக்குத் திரும்புவதற்காக தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் காவலர் சீருடையில் இருந்தார்.பேருந்து கிணத்துக்கடவு நிறுத்தத்தில் நின்றபோது பல கல்லூரி மாணவிகள் ஏறினர். அப்போது கோவையைச் சேர்ந்த 19 வயதான ஒரு கல்லூரி மாணவி பேருந்தில் ஏற முயன்றபோது, காவலர் மணிவேந்தன் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து கையைப் பிடித்து ஏற்றியதாக தெரிகிறது.
பேருந்தில் பயணிகள் அதிகமாக இருந்த நிலையில், உதவுவது போன்ற போர்வையில் அவர் அந்த மாணவியிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி திகைத்துப் போனார். பேருந்து மதுக்கரை காவல் எல்லையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் நின்றபோது அவர் கீழே இறங்கினார். அங்கு இருந்த சக மாணவிகளிடம் நடந்ததைத் தெரிவித்தார். அவர்கள் காவலரைக் கண்டித்தனர்.
பின்னர் மாணவி தன் பெற்றோரிடமும் இதைப் பற்றிக் கூறினார்.இதுகுறித்து மாணவி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் பாலியல் சீண்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் மணிவேந்தன் சம்பந்தப்பட்டது உறுதியானதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் துறை ரீதியான நடவடிக்கையாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், காவலர் மணிவேந்தனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.