இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஜூலை 17 முதல் மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, சுமார் 7.6 கிலோமீட்டர் உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு வரை, தமிழகம், தெற்கு உள்கர்நாடகம் மற்றும் வடக்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... வெயில் கொளுத்தும்..! வெப்பநிலை வாட்டும்..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜூலை 19-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை 20 மற்றும் 21-ஆம் தேதிகளிலும் அந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இயல்பான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்றும், குறிப்பாக உள்தமிழக மாவட்டங்களில் இந்த வெப்பநிலை உயர்வு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்றும், உள்தமிழக பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இன்று கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதமும் நிலவக்கூடும். இதனால் வெப்பம் தொடர்பான அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஜூலை 23-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், உள்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "HEAT WAVE"... உஷார் மக்களே..! எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை..? லிஸ்ட் இதோ..!!