குளியல் அறையில் ரகசிய கேமிரா!! வடமாநில பெண்ணின் குரூர புத்தி!! வெளிச்சத்திற்கு வந்த திட்டம்!!
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது காதலன் ரகசிய கேமராவை கொடுத்து குளியல் அறையில் வைக்க சொன்னதாகவும், தான் கேமரா மற்றும் டிவைஸ் ஆகியவற்றை பை மற்றும் ஷூவில் மறைத்து வைத்து எடுத்து வந்ததாகவும் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரத்தில், ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இந்தப் பெண் ஊழியர்கள் தங்கும் லாலிக்கல் கிராமத்தில் உள்ள அடுக்கு மாடி மகளிர் விடுதியில், கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குளியலறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், பெண் ஊழியர்கள் கூடுதலான பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது நீலுகுமாரி என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கையில், தனது காதலன் சொன்னதால் கேமராவை வைத்ததாகவும், அதை பை, ஷூவில் மறைத்துச் சென்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் பெங்களூரு சென்று 'சந்தோஷ்' என்ற அவரது காதலனைத் தேடினர். ஆனால், தீவிர விசாரணையில், சந்தோஷ் அவரது காதலர் இல்லை என்பதும், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் கோகரா தாலுகா குலாப் நகரைச் சேர்ந்த 29 வயது ரவிபிரதாப் சிங் என்பவரே உண்மையான காதலர் என்பதும் தெரியவந்தது. தனது காதலனைத் தப்ப வைக்க, நீலுகுமாரி 'சந்தோஷ்' என்று நாடகமாடித்ததும் வெளிப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்!! குற்றவாளிகளை நெருங்கும் சிபிஐ!! தவெக தலைமை அலுவலக ஊழியரிடம் விசாரணை!
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் பதுங்கியிருந்த ரவிபிரதாப் சிங்கை கடந்த நவம்பர் 6-ஆம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். அவரை விமானத்தில் பெங்களூரு அழைத்து வந்து, அங்கிருந்து நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் விவரங்கள் வெளியே வந்துள்ளன.
போலீஸ் விசாரணைப்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரியும், பஞ்சாப் மாநிலம் லூதியானா குலாப் நகரைச் சேர்ந்த சஞ்சய் குமார் சிங்ஹின் மகன் ரவிபிரதாப் சிங்ஙும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நீலுகுமாரியை காதலிப்பதாகக் கூறினார்.
ரவிபிரதாப் சிங்குடன் பேசுவது போலவே, சந்தோஷ்குமாருடனும் அவர் செல்போனில் பேசி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நீலுகுமாரி, மகளிர் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை தனது காதலன் ரவிபிரதாப் சிங்கிற்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீலுகுமாரியிடம் ரவிபிரதாப் சிங் பேசினார். "நான் சொந்தமாகக் கார் வாங்க வேண்டும். உன்னை காரில் உட்கார வைத்து ராணி போலப் பார்க்க வேண்டும். அதற்கு பணம் தேவை" என்று அவர் கண்ணீர் வடித்தார். "அந்த நேரம் உனக்கு பணம் தர நான் என்ன செய்ய வேண்டும்?" என்று நீலுகுமாரி கேட்டதற்கு, "நான் ஒரு ஐடியா வைத்துள்ளேன். நீ பெங்களூரு வா" என்று ரவிபிரதாப் சிங் கூறினார்.
அதை நம்பி அவர் பெங்களூரு சென்றார். அங்கு, ரகசிய கேமரா ஒன்றைக் கொடுத்த ரவிபிரதாப் சிங், "இந்தக் கேமராவை உனது அறையில் வை. உனது அறையில் தங்கியுள்ள பெண்களின் செல்போன் எண்களை எனக்கு அனுப்பு. நான் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறேன். அப்படி பணம் பறித்தால் நாமும் கார் வாங்கி ஜாலியாக வாழலாம்" என்று ஐடியா கொடுத்தார். தனது காதலன் வகுத்த திட்டப்படி, ரகசிய கேமராவை நீலுகுமாரி வைத்தது தெரியவந்தது.
இந்தக் கேமரா விவகாரம் வெளியானதால், காதலனைத் தப்ப வைக்க, தன்னிடம் பேசி வந்த சந்தோஷ் தான் இதற்குக் காரணம் என்று கூறி அவனை மாட்டிவிட நீலுகுமாரி திட்டம் போட்டது. நீலுகுமாரி சிக்கியதால், ரவிபிரதாப் சிங் தனது செல்போனை சுவிட்ச்-ஆஃப் செய்தார். ஆனால், நீலுகுமாரி மாற்றி மாற்றி பேசியதை வைத்தும், அவர் ரவிபிரதாப் சிங்குடன் அடிக்கடி பேசியதை வைத்தும், முக்கிய குற்றவாளி ரவிபிரதாப் சிங் தான் என போலீசார் உறுதி செய்தனர்.
நீலுகுமாரி சிக்கிய தகவல் அறிந்த ரவிபிரதாப் சிங், முதலில் பெங்களூருவிலிருந்து பஞ்சாப் தப்பிச் சென்றார். பின்னர், டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் தங்கும் விடுதியில் இருந்தபோது, போலீசார் சென்று கைது செய்தனர்.
கைதான ரவிபிரதாப் சிங் வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், தொழிலாளர் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் 11 அடுக்கு மாடிகள், 8 பிளாக்கள் உள்ளன; 6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்குகின்றனர்.
ஒரு அறையில் 4 பேர் தங்குகின்றனர். கேமரா நவம்பர் 2-ஆம் தேதி வட இந்திய பெண்கள் தங்கும் அறையின் குளியலறையில் வைக்கப்பட்டது. நீலுகுமாரி அந்த அறையின் தங்கல் நபர்களில் ஒருவர். இச்சம்பவத்தால், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். போலீசார், "கேமரா வீடியோக்கள் வேறு யாரிடமும் பகிரப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி காவல் துறை, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பயிரை மேய்ந்த வேலி!! கோவைலய தொடர்ந்து விழுப்புரம் மாணவிக்கு கொடூரம்! போலீஸ்காரர் கைது!