"உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!
உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம், ஊழல் இருக்காது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமில்லை என்றும், முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வகையில் புதிய வசதி உருவாக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கல்விக் கடன் தொடர்பாக பேசிய அமைச்சர், ரூ.4.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறும்போது தற்போது பிணை கேட்கப்படும் நடைமுறை இருப்பதாகவும், அதை மாற்றுவதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
கல்வி மட்டுமின்றி, அதனுடன் வேலைவாய்ப்பும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார். மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு பெறும் வகையில் உயர்கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், உயர்கல்வித் துறையில் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட செயல்பாடுகளில் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், உயர்கல்வித் துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது பெற்றாலோ அதுகுறித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் கூறினார். இதற்காக உயர்கல்வித் துறைக்கென தனி இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றும், அதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்று 60 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், உயர்கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு உயர்கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!