சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு! துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்! மருத்துவமனையில் ரவுடி படுகொலை!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டுக்குள் ரவுடி ஆதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், ரவுடி ஆதி என்ற ஆதிகேசவனை (20) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிறைந்த அரசு மருத்துவமனையின் புதிய வார்டு பகுதியில் அரங்கேறிய இந்த ரத்தச் சரித்திரம், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களை அலறச் செய்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஆதி, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மீது கொலை வழக்கு உட்பட 9 குற்ற வழக்குகள் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் துரித நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், இரண்டு பெண்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி, ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா என்பவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை நேற்று உயிரிழந்த நிலையில், இது குறித்து சுசித்ரா தனது நண்பரான ரவுடி ஆதிக்குத் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாருமதி என்ற பெண்ணுடன் ஆதி நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் புதிய வார்டு பகுதியில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, அங்குத் திட்டமிட்டபடி வந்த 3 பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் ஆதியைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
இதையும் படிங்க: அவலநிலையில் சேலம் அரசு மருத்துவமனை… என்னதான் செய்றீங்க? கொந்தளித்த அண்ணாமலை…!
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய ஆதியை அங்கிருந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்; ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 3 கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையை இழந்த சுசித்ரா மற்றும் உடன் வந்த சாருமதி ஆகியோருக்கு இந்தச் சதியில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகித்த போலீசார், இருவரையும் கைது செய்துள்ளனர். பழிக்குப் பழி வாங்க இந்த இரு பெண்களையும் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதியை வரவழைத்துக் கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ராக்கெட்.. 18 சேட்டிலைட்! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் சீறிப்பாயும் இஸ்ரோவின் PSLV C-62!