×
 

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..!! மருத்துவ நிர்வாகம் கொடுத்த அப்டேட்..!!

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 101) அவர்களின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரமாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவரது உடல்நிலையை சீரமைக்க பல்துறை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) உதவியுடன் சுவாச சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகளின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லகண்ணு அவர்கள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், டிசம்பர் 25-ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பெற்று ஜனவரி 8-ஆம் தேதி வீட்டுக்கு சென்றார். 

இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடன் இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது - சிபிஐ வீரபாண்டியன்..!!

ஆனால், பிப்ரவரி 1-ஆம் தேதி மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அவரது உடல்நிலையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே. சேகர்பாபு ஆகியோரும் இருந்தனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வீரபாண்டியன், “நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தோழர் நல்லகண்ணு தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்” என்று கவலையுடன் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். 101 வயதான நல்லகண்ணு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரது உடல்நலம் விரைவில் மீண்டு சீராக வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

இதையும் படிங்க: உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share