ஓசூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... கல்வித்துறை பயிற்சியாளர் போக்சோவில் கைது...!
சிறுமியின் சகோதரரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சூளகிரி கல்வித்துறை பயிற்சியாளர் மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பெத்த ஏலசகிரி மகேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் (52). இவர் சூளகிரி பகுதியில் கல்வித்துறையில் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 3 ஆண்டுகளாக ஜெயராம் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண்ணின் 15 வயது மகளிடமும் ஜெயராம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: 11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்...!
மேலும், தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் பள்ளியில் தேர்வு எழுத விடாமல் தடுத்து விடுவதாகவும், சிறுமியின் சகோதரரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த விவரங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஜெயராம் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... 8 மணி நேரத்தில் 200 கேள்விகள்... சாந்தி, சிம்கனை துருவியெடுத்த போலீஸ்...!