×
 

கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் அவரது தோழி கைது!

கோவில் திருப்பணி செய்யும்,ஒப்பந்தக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய, தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட அவரது தோழி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் கோவில் திருப்பணி தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் மற்றும் அவருக்கு புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படும் பெண் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தீபாம்பாள்புரம் பகுதியில் அமைந்துள்ள மங்களாம்பிகை சமேத வன்மீகநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் மதியழகன் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பணி பணிக்கான தொகையை விடுவிக்க வேண்டுமெனில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 27 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்..! விண்ணப்பங்கள் கொடுக்க அறிவுரை..!! முழு விவரம்.!

மேலும், அந்தத் தொகையை நேரடியாக வழங்காமல், தனது நெருங்கிய தோழியான கிரிஜா மூலம் கொடுக்குமாறு அவர் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்தக்காரர் மதியழகன், லஞ்சம் வழங்க விருப்பமில்லை என முடிவு செய்து, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் முறையிட்டார்.

புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரகசியமாக நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு மதியழகன், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஜோதிலட்சுமி மற்றும் கிரிஜாவிடம் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அலுவலகத்தில் மறைந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக இருவரையும் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் பெற்றதாக கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில், கிரிஜா இணை ஆணையரின் நெருங்கிய தோழி என்பதுடன், பல்வேறு விவகாரங்களில் இடைத்தரகராக செயல்பட்டு வந்தாரா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கைது சம்பவம் ஹிந்து சமய அறநிலையத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அறநிலையத்துறை கோவில்களில் அதிரடி மாற்றம்!! டெண்டர் முறையில் புதிய விதிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share