×
 
☰

“தைரியம் இருந்தா ராஜினாமா செய்ங்க..!” ராகுல் காந்தியை நோக்கி நிதின் நபின் காட்டமான கேள்வி..!!

அவர் யாருக்காகப் போராடுகிறார் என்பதை நாடு உன்னிப்பாகக் கவனிக்கிறது என்று நிதின் நபின் வலியுறுத்தினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரியுடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி அராஜக மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய நிதின் நபின், “தேர்தல் ஆணையத்தை நிராகரிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? தனது நிலைப்பாட்டில் உண்மையாக இருந்தால், முதலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து காட்டட்டும். அதன்பிறகுதான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இந்த அராஜக நாடகங்களை நடத்தட்டும்” என்று சவால் விடுத்தார்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களையும் இதே மத்திய தேர்தல் ஆணையமே நடத்தியது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முடிவுகள் சாதகமாக இருக்கும்போது மௌனம் காத்து, தோல்வி பயம் ஏற்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸின் பாரம்பரிய பாணி எனச் சாடினார். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் சட்டவிரோத ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்குவதற்கு எதிராக ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் தெருக்களில் அமளியில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

“இந்தியாவின் வளங்கள், செல்வம், மண் ஆகியவை சாமானிய குடிமக்களுக்கு மட்டுமே சொந்தம். சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு எந்த உரிமையும் அளிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராகுல் நாட்டின் வளங்களை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முயல்கிறார். அவர் யாருக்காகப் போராடுகிறார் என்பதை நாடு உன்னிப்பாகக் கவனிக்கிறது” என்று நிதின் நபின் வலியுறுத்தினார்.

இந்த விமர்சனம், டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு அடுத்த நாளே வெளிவந்துள்ளது. காசி விஸ்வநாதர் கோரிடார் மேம்பாட்டைப் பாராட்டிய நிதின் நபின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share