உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தீவிரமடையும் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (22-05-2025) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும், வலுவடைய வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். எனவே, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்தவரை, இன்று முதல் 26ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: வடமாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!!
வங்கக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி 24ம் தேதி வரை ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிகடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்- கோவா கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 மாவட்டங்களில் இடி மின்னல்; கொட்டித்தீர்க்க போகும் மழை... வானிலை மையம் வார்னிங்!!