×
 
☰

கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

கோயில் மனை குடியிருப்போருக்கான அரசாணையை அமல்படுத்தக் கோரி 27ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இரா முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் குடியிருப்போரின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நிலுவையில் உள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 27-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனை குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் (மாநிலத் தலைவர்), ஏழுமலை (மாநிலப் பொருளாளர்) ஆகியோருடன் இணைந்து இரா. முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளின் குத்தகை மற்றும் வாடகையை முறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959-ன் பிரிவு 34-A-ன் கீழ் புதிய விதிமுறைகளுக்கான அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை வரவேற்று, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!

ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் அந்த அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற தாமதம் நிலவி வருகிறது. கோயில் மனை குடியிருப்போரின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அரசாணையை அமல்படுத்தவும் தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகளை மூன்று முறை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது, மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க 3 மாத கால அவகாசம் கேட்டனர். ஆனால், கால அவகாசம் முடிந்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்துத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால், உரிய பதிலளிக்காமல் அலட்சியமாகப் புறக்கணித்து வருகின்றனர்.

இப்பிரச்சினை குறித்துச் சட்டமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்ட போதிலும், அரசுத் தரப்பிலிருந்து தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கிய இந்த விவகாரத்தில் அரசு இனியும் மெத்தனமாக இருக்கக் கூடாது. எனவே, குடியிருப்போரின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், வரும் அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

அரசை வீணாகக் குறை சொல்வதற்காக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை; 20 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களின் கண்ணீரை அரசுக்குப் புரிய வைத்து அரசாணையை அமல்படுத்த வைக்கவே இந்த ஆர்ப்பாட்டம்" என்று இரா. முத்தரசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கைதான விவசாயிகளை உடனே விடுதலை செய்க: தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share