திருச்சியில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் மதுபோதையில் தள்ளாடிய காவலர் - சக போலீசார் அதிர்ச்சி!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற அரசியல் கட்சி ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் மதுபோதையில் இருந்த சம்பவம் அங்குப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்ற முயலும் மத்திய பாஜக அரசைத் தண்டிக்கும் வகையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநகரச் செயலாளர் மற்றும் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வழங்கவும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த சதிஷ் என்ற ஆயுதப்படை காவலர், சீருடையில் இருந்தபோதே மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார். போராட்டக் களத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய காவலரே, போதையில் நிற்க முடியாமல் அங்குமிங்கும் ஊசலாடியது அங்கிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சக காவலர்கள், தங்களது துறைக்கே இது அவமானம் என்பதை உணர்ந்து, உடனடியாக சதிஷை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு பொது மேடையின் அருகே, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவலரே குடிபோதையில் வந்த சம்பவம் திருச்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சமயம் அங்குப் போராட்டக் களத்தில் இருந்த மேயர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால், அந்தத் தள்ளாடிய காவலர் மீது உடனடியாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “மத்திய அரசு அளித்த மானியம் வருமானமல்ல!” - ஆவின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே போதையில் இருந்த சம்பவம் காவல்துறையினரிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார் குறித்துத் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Posting போட காசு... மா.செ. அட்டூழியம்...! மதுரையில் தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்...!