×
 

“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ₹3.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காந்தி - ஜீவா மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு தலைவர்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல்களை நினைவு கூர்ந்தார். 

சிவகங்கை மாவட்டம் சிராவயலில், மகாத்மா காந்தி மற்றும் தோழர் ஜீவானந்தம் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ₹3.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம், வெறும் கட்டிடமாக மட்டுமின்றி மக்களின் பயன்பாட்டிற்கானத் திருமண மண்டபமாகவும் திகழும் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி இப்பகுதிக்கு வந்தபோது, அவருக்காகத் தோழர் ஜீவா ஓர் ஆசிரமத்தைக் கட்டியிருந்தார். அப்போது காந்தி அவர்கள் ஜீவாவைப் பார்த்து, உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு ஜீவா அவர்கள் அந்த ஆசிரமத்தைக் காட்டினார். ஆனால், காந்தி சிரித்துக்கொண்டே, 'இல்லை.. இல்லை.. இந்த இந்தியாவே உங்களது சொத்து' என்று கூறினார். அந்தப் பொன்மொழிகள் இன்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளன என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "வரலாறு பேசும் மணிமண்டபம்!" – சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

இந்த மணிமண்டபம் வரலாற்று நினைவுகளைச் சுமந்து நிற்பதோடு, இப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள ஏதுவாகத் திருமண மண்டப வசதிகளுடனும் கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவின் முக்கிய அறிவிப்பாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்குச் சென்னையில் சிலை அமைக்கப்பட உள்ளதை முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் விடுத்தக் கோரிக்கையை ஏற்று, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்க அரசு முடிவெடுத்தது. நூலகத்தையேத் தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்தவர் கார்ல் மார்க்ஸ். அவரது அறிவாற்றலைப் போற்றும் வகையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி கன்னிமாரா நூலகத்தில் அவரது சிலைத் திறந்து வைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் அறிவித்தார்.

இந்தச் சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்குத் தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அரசின் சார்பில் முறைப்படி அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், வரலாற்றையும் கொள்கை வழிகாட்டுதல்களையும் இன்றையத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதே இந்த அரசோரின் நோக்கம் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: “மக்களிடம் செல்வோம், குறைகளைக் கேட்போம்” - சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தீவிரப் பயணத்தில் முதலமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share