'Pakistan Kashmir' சர்ச்சை! நியூயார்க் டைம்ஸுக்கு இந்தியா கடும் கண்டனம்!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, 'பாகிஸ்தான் காஷ்மீர்' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாளிதழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை “Pakistan Kashmir” என்று குறிப்பிட்டிருந்ததற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கங்கள் என்றும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகவே இருந்துள்ளன, என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் நிலைப்பாட்டை மதிக்கும் வகையில் அனைத்து நாடுகளும், சர்வதேச அமைப்புகளும், வெளிநாட்டு ஊடகங்களும் அந்தப் பகுதிகளை சரியான பெயரிலேயே குறிப்பிட வேண்டும். தவறான பெயர்களைப் பயன்படுத்துவது குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தும்” என்றார்.
இதையும் படிங்க: நான் இனவெறியாளனா?! தன்மீதான குற்றச்சாட்டுக்கு இந்தியாவை குறிப்பிட்டு எலான் மஸ்க் பதிலடி!
இதற்கு முன்பாகவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகமும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்புக்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “'Pakistan Kashmir' என்ற பெயரில் எந்தப் பகுதியும் இல்லை. அது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதி. அந்தப் பகுதி முழுமையாக இந்தியாவுக்குச் சொந்தமானது. எனவே தவறான வார்த்தைப் பயன்பாடு உண்மைக்கு புறம்பானது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அந்தப் பகுதியில் பாகிஸ்தான் நீண்ட காலமாக வன்முறையை ஊக்குவித்து வருவதாகவும் இந்தியா தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முக்கிய அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரச்சினையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில், சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் சொல் பயன்பாடுகளும் இரு நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்த நிலையில், காஷ்மீர் தொடர்பான செய்திகளில் சர்வதேச ஊடகங்கள் துல்லியமான மற்றும் அதிகாரப்பூர்வமான பெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இந்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி!" – ஐ.நா.வில் இந்தியா கடும் பதிலடி