இனி கவலையில்லை! ரயில்வேயை நோக்கி படையெடுத்த பயணிகள்: விரைந்து செயல்பட்ட இந்திய ரயில்வே!
இந்தியா முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் விமான சேவைகள் திடீர் ரத்து மற்றும் நீண்ட கால தாமதம் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பயண நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் துரித நடவடிக்கை எடுத்து, பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 37 பிரதான ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்துப் பயணிகளை மீட்டெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக, இயக்கச் சிக்கல்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமானச் சேவைகள் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்குள்ளாகி, ரயில்வேயை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்தத் திடீர் பயணிகள் திரள் காரணமாக ஏற்பட்ட நெரிசலைத் தணிக்கும் விதமாகவே ரயில்வே வாரியம் இந்த மிகைச் சேவைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
ரயில்வே வட்டாரங்களின் தெரிவித்துள்ள தகவலின்படி, நாடு முழுவதும் 37 ரயில்களில், உறங்கும் வசதி கொண்ட பெட்டிகள், ஏ.சி. சேர் கார் பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகள் என மொத்தம் 116 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 114 அதிகரித்த பயணங்களின் மூலம் சுமார் 4 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு ராஜதானி மற்றும் திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களிலும் கூடக் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆசிட் வீச்சு வழக்கில் 16 ஆண்டுகள் தாமதம்: "இது நாட்டிற்கே அவமானம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
மேலும், இந்தப் பெருந்திரள் காரணமாகத் தேவைப்படும்பட்சத்தில், வடக்கு ரயில்வே மண்டலம் மட்டும் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்கவும் தயாராகி வருவதாகவும், நாடு முழுவதும் மேலும் 30 புதிய சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடி காலத்தில், பயணிகளுக்கு நம்பகமான மாற்றுப் போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில், ரயில்வேயின் இந்த இடைக்காலத் தலையீடு அமைந்துள்ளது என்று சமூகம் சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். விமானப் பயணச் சிக்கல்களால் தவிக்கும் பயணிகளுக்கு இந்த ரயில்வேயின் விரைவுச் செயல்பாடு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.ss
இதையும் படிங்க: பணிச்சுமையை மாநில அரசுகள் கவனிக்கணும்! SIR பணி குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!