4-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் உடைமைகளை கேட்டு வாக்குவாதம்!
நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் கடந்த சில நாட்களாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலும் 4-வது நாளாக இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி, பல மணி நேரம் தாமதமாகியுள்ளன.
நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் கடந்த மூன்று தினங்களாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலும் 4-வது நாளாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி, பல மணி நேரம் தாமதமாகின்றன.
சென்னை விமான நிலையத்தில் இன்று மொத்தமாக 62 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.இதில் 26 புறப்பாடு விமானங்களும், 14 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமான விமானங்கள் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட சேவைகளில் அபுதாபி, துபாய், இலங்கை, சிங்கப்பூர், பாங்காக், இந்தோனேசியா போன்ற சர்வதேச விமானங்களும், கோவை, டெல்லி, மும்பை, திருச்சி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.
விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படவில்லை. எந்த விமானங்கள் ரத்து, எவ்வளவு நேரம் தாமதம் என்ற விவரங்களும் முறையாகத் தெரிவிக்கப்படாததால் பயணிகள் கொந்தளித்தனர்.
இதையும் படிங்க: மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!
சென்னை விமான நிலையத்தின் இணையதளத்தில் விமானங்கள் ரத்து/தாமதம் பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படாமல், Unknown என்று மட்டுமே இருந்ததால், பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான பயணிகள், புறப்பாடு பகுதிக்குள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் நடத்தினர். குறிப்பாக, பாதுகாப்புச் சோதனை முடித்து விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தங்களுடைய உடைமைகளைத் திரும்பப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருந்ததால், இண்டிகோ கவுண்டர்களைச் சூழ்ந்து கொண்டு பணத்தைத் திரும்பக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளின் வாக்குவாதம் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாக விமான நிலைய போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்தனர். பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மத்திய தொழிற்படை போலீஸ் (CISF) குவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!