×
 
☰

துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி என்பது துரோகத்திற்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என்றும், முதலமைச்சர் விஜய்யின் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் களத்தில் அயராது உழைத்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் இது; வாக்களித்த மை அழிவதற்கு முன்பாக மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் விலகி ஆளுங்கட்சியில் சேர்ந்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையால் உருவான தேர்தல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

முதலமைச்சர் விஜய்யின் பிரச்சாரங்களைக் கடுமையாக விமர்சித்த அவர், அதிகார பலம், பணபலம் மற்றும் போலீஸ் பலத்தை வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டார்கள்; பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி முதலமைச்சரான விஜய், இந்தத் தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என நம்பினார்.

டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார் என ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனதில்லை. 5 நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று கூறப்பட்டவரை, 4 நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள் என்று சாடியுள்ளார்.

மேலும் விதிமீறல்களைப் பட்டியலிட்ட அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம் போன்ற திட்டங்களை அறிவித்துத் தேர்தல் நடத்தை விதிகளை மீறினர்; கூகுள் பே மூலமாகப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கி ஊரையே விலை பேசினர்; கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் வீடியோக்களும் வெளியாகின. துரோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டனர்; 17 வயது இளைஞர் கூட கைது செய்யப்பட்டார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு எதிராக விழுந்த வாக்குகளே பெரும்பான்மை எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தவெகவுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள்; அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம், பழிவாங்கும் நடவடிக்கைகள், அசிங்கமான சைகைகள் மற்றும் ரீல்ஸ் எடுப்பதை விட்டுவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். கார்ப்பரேட் மாஃபியாக்களின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் மக்கள் பரப்புரையைத் திமுக தொய்வின்றித் தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share