நீதிமன்ற அதிகாரியை காக்க வைத்ததால் வினை! நாள்முழுவதும் கோர்ட்டில் காத்திருந்த ஐபிஎஸ் அருண்! பரபரப்பு பின்னணி!
நீதிமன்ற அதிகாரியை காத்திருக்க வைத்ததால் ஐபிஎஸ் அதிகாரி அருணை நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருக்க வைத்தபோது, சென்னை ஐகோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி அருண், நீதிமன்ற அதிகாரியை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததால், அவரே நாள் முழுவதும் நீதிமன்றத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
கொளத்தூரில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதியின் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான ஆட்கொணர்வு மனு நேற்று (மே 27) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அருணுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரியை பிற்பகல் 3.05 மணி முதல் 5.15 மணி வரை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கோபமடைந்த நீதிபதிகள், அருணின் ஊழியரை உடனடியாக நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இதனால் அருண் நாள் முழுவதும் உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!
பிற்பகல் 2.30 மணியளவில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அந்த ஊழியரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார். “அவரை எவ்வளவு நேரம் காத்திருக்க வைத்தீர்கள்? ஒரு மணி நேரமா? பொய் சொல்லாதீர்கள். வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க?” என நீதிபதி கேட்டார்.
அந்த ஊழியர், அருண் அன்று காலையில் தான் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்றதாகவும், அந்த நேரத்தில் ஐ.ஜி., டி.ஐ.ஜி. அதிகாரிகளுடன் முக்கிய கூட்டத்தில் இருந்ததாகவும் விளக்கம் அளித்தார். நீதிபதி சுவாமிநாதன், நீதிமன்ற அதிகாரியை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததற்காக அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் முன்னறிவிப்பு வழங்க விரும்பியதாலேயே அருணை வரவழைத்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற அதிகாரத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நீதிபதிகளின் கடுமையான எச்சரிக்கை அதிகார வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிகாரிகள் தங்கள் பதவியை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!