உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகள் ஏன்? தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!
அரசு கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில், ஆங்கில பாடத் தேர்வு முடிவுகளில், தேர்வர்களை அடையாளப்படுத்த, வண்ண குறியீடுகள் இருப்பதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கு 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 25-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஏற்கனவே, தேர்வின் இரண்டாம் தாளில் சிலருக்கு ஒரு மதிப்பெண் குறைத்து 49 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதோடு, சிலருக்கு பூஜ்ய மதிப்பெண்களும் அளிக்கப்பட்டதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். குறிப்பாக, பல ஆண்டுகள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், ஆங்கிலப் பாடத் தேர்வு முடிவுகளில் சில தேர்வர்களின் மதிப்பெண்களுக்கு அருகில் மஞ்சள், நீலம் உள்ளிட்ட வண்ண குறியீடுகள் இடம்பெற்றிருப்பது புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வண்ண அடையாளங்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டன? அவற்றின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை தேர்வர்கள் எழுப்பியுள்ளனர். மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: போட்டித் தேர்வு வினாத்தாள்கள் விற்கப்படும் மோடி ஆட்சிக்கு எதிராக போராட்டம் - எம்பி ஜோதிமணி அழைப்பு!
தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி. தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை ரத்து செய்து, முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரிடம் மனு அளிக்க இருப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வின் மதிப்பீட்டு முறை, மாதிரி விடைத்தாள் மற்றும் மதிப்பெண் வழங்கிய நடைமுறை ஆகிய அனைத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் தொடர்பான சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!