×
 

தொடங்கியது கவுண்டவுன்!! அமெரிக்க செயற்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி!

ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (டிசம்பர் 24, புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்.3 - எம்.6 (பாகுபலி) ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

இந்த ராக்கெட்டில் அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 'புளூபேர்ட் பிளாக்-2' என்ற 6.5 டன் எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் செல்போன்களுக்கு நேரடியாக உயர்தர இணைய இணைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஏவுதளத்தில் ராக்கெட் முழு தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் அனைத்து செயல்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை மறுநாள் விண்ணில் பாயும் அமெரிக்க செயற்கைகோள்! திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

இந்த ஏவுதலுக்கான இறுதிக்கட்டமான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோவின் நீண்டகால பாரம்பரியத்தின்படி, முக்கிய ஏவுதல்களுக்கு முன்பு திருப்பதி திருமலை வெங்கடேசுவரசுவாமி கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அதன்படி, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நேற்று திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து திரும்பினர்.

இந்த மிஷன் இஸ்ரோவின் வணிக ரீதியிலான முக்கியமான ஏவுதலாகும். புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் பூமியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்தப்படும். இது உலகளவில் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு நேரடி செல்லுலார் பிராட்பேண்ட் சேவை வழங்க உதவும்.

இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் இதுவரை சந்திரயான்-2, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கிய மிஷன்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த ஏவுதலும் வெற்றி பெறும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாளை மறுநாள் விண்ணில் பாயும் அமெரிக்க செயற்கைகோள்! திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share