×
 

கரூர் பிரச்சாரத்திற்கு சிறிய சாலை.. இது நியாயமே இல்ல.. எம்.பி ஹேமமாலினி தடாலடி..!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்திற்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என்று எம்.பி ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

கரூரில் கடந்த 27ம் தேதி அன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பான கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எம்.பி.கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்த இந்தக் குழுவை எம்.பி ஹேமமாலினி தலைமை தாங்கினார். இந்த ஆய்வு, சம்பவத்தின் உண்மையான காரணங்களைத் தெரிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

கோவை விமான நிலையத்தில் இன்று அதிகாலை வந்த குழு, கரூர் சென்றனர். ஹேமமாலினி, அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஶ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் அடங்கிய இக்குழு, வேலுசாமிபுரத்தில் நடந்த பிரச்சார இடத்தை முதலில் பார்வையிட்டது. அங்கு பெருந்திரளின் அழுத்தத்தால் ஏற்பட்ட குழப்பத்தின் அடையாளங்களை ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: பேசுற நிலையில இல்ல...கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா முதல்முறையாக பேட்டி...!

பின்னர், கரூர் அரசு மருத்துவமனையையும், சிகிச்சை மையங்களையும் நோக்கி சென்ற குழு, உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளைப் பதிவு செய்து, உள்ளூர் அதிகாரிகளுடன் விவாதித்த குழு, அரசியல் நோக்கமின்றி உண்மைகளைத் திரட்டுவதாக வலியுறுத்தியது.

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, கரூர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தது தொடர்பாக உண்மையை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணி விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களிடம் பேசவுள்ளோம். உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியவுள்ளோம் என்று கூறினார்.

மேலும் எப்படி இந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது? பெரிய நடிகருக்கு, சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது என்று எம்.பி ஹேமமாலினி கூறினார். தவெகவினர் சிறிய இடம் கேட்டிருந்தாலும், அரசு அவர்களுக்கு பெரிய இடத்தை வழங்கியிருக்க வேண்டும் என்றும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம் என்று கூறினார்.

என்டிஏ குழுவின் இந்த ஆய்வு, 2026 தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் சூழலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை விரைவில் பாஜக தலைமைக்கு சமர்ப்பிக்கப்படும். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: லண்டனில் காந்தி சிலை சேதம்.. அகிம்சை சின்னத்தின் மீது தாக்குதல்.. கொந்தளித்த இந்தியர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share