நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!
நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் மெலோனி தோல்வியை தழுவினார். எனினும் நாட்டின் பிரதமராகத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.
இத்தாலியில் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான முக்கிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பணிக்காலப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய மாற்றங்களுக்கு மக்களின் ஒப்புதல் கேட்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில், எதிர்பார்த்ததை விட அதிகமான 58 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை முடிவில், அரசின் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக 46.5% வாக்குகளும், எதிர்ப்பாக 53.5% வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் நீதித்துறை சீர்திருத்த திட்டம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட மெலோனி, வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இத்தாலிய மக்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டனர். அந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறினார். மேலும், “இந்த வாக்கெடுப்பு இத்தாலியை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டது என்று நான் கருதுகிறேன். ஆனால், தேசத்தின் நலனுக்காக நான் தீவிரத்துடனும், உறுதியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!
“இந்த வாக்கெடுப்பு முடிவு எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. நடுநிலையை உறுதி செய்வதற்கும், இத்தாலியின் சீர்குலைந்த நீதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தற்போதைய நடவடிக்கைகள் மிகவும் அவசியம்” என்று மெலோனி தெரிவித்தார்.
இத்தாலியில் வலதுசாரி அரசு நடத்தி வரும் மெலோனி, நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களை கொண்டு வர விரும்பினார். ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதித்துறை வல்லுநர்களின் கடும் எதிர்ப்பால் இந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்துள்ளது.
இருப்பினும், பிரதமராக தொடர்வேன் என மெலோனி உறுதியாக அறிவித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாடு, அடுத்த சில மாதங்களில் இத்தாலி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலி மக்கள் நீதித்துறை சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மெலோனியின் தலைமையில் அரசு தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த வாக்கெடுப்பு முடிவு ஐரோப்பிய அரசியலிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானுடன் ட்ரம்ப் ஒப்பந்தம்? இஸ்ரேல் நலன்களை US பாதுகாக்கும்! நெதன்யாகு நம்பிக்கை!