அரசுடன் மல்லுக்கட்டும் ஜாக்டோ - ஜியோ! ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!
ஜனவரி 6-ஆம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு இன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழுவுடன் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த அரசுத் தரப்பு, எவ்விதமான உறுதியான காலக்கெடுவையோ அல்லது தெளிவான வாக்குறுதியையோ வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டக் களத்திற்குத் திரும்ப ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் முதற்கட்டமாக, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து, புத்தாண்டுப் பிறந்த சில நாட்களிலேயே, அதாவது ஜனவரி 6 முதல் பணிகளைப் புறக்கணித்துக் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் அரசின் போக்கைக் கண்டித்து இந்த ‘சுளீர்’ முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்களின் இந்தத் திடீர் போர்க்கொடி ஆளும் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஒற்றைக்காலில் நின்று உறுதி காட்டி வருகின்றனர். ஜனவரி 6-ல் தொடங்கவுள்ள இந்த வேலைநிறுத்தம் தமிழகத்தின் நிர்வாக இயந்திரத்தை முற்றிலும் முடக்கும் என்பதால், அரசு அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் வளாகத்தில் புதிய பிளான்: பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா வழக்கு!
இதையும் படிங்க: செலவு ₹4,000 கோடி! ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை - தமிழக அரசு விளக்கம்!