முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்..!! யார் இவர்..??
அரசியலில் விஜய் அடியெடுத்து வைத்தவுடன் அவருக்கு நம்பிக்கையான உதவியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் தனி செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இவரது பணி நிபந்தனைகள் விரைவில் தனியாக அறிவிக்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகராக இருந்த காலத்தில் இருந்து விஜய்யுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருபவர் ஜெகதீஷ் பழனிசாமி. திரையுலகில் விஜய்யின் மேலாளராகப் பணியாற்றிய அவர், அரசியலில் விஜய் அடியெடுத்து வைத்தவுடன் அவருக்கு நம்பிக்கையான உதவியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் பிரசார வியூகங்கள், வார் ரூம் நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்ட ரூட் (The Route) அமைப்பின் நிறுவனர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஜெகதீஷ் பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது. “கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிர ரசிகனாக வரிசையில் நின்று உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆவல் கொண்டிருந்தேன். இன்று மாநிலத்தின் முதல்வரின் தனிச் செயலராக உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை முழு வட்டம் போல் உணர்கிறது” என்று உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார். கடினமான காலங்களில் விஜய் தனக்கு அளித்த உற்சாகமும் ஆற்றலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை என்றும், தொடர்ந்து ஊக்கமளித்ததற்கு நன்றி தெரிவித்தும் அவர் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு குறித்து நாளை விளக்கமளிப்பார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
‘தி ரூட்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2020-ம் ஆண்டு ஜெகதீஷ் பழனிசாமி இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். திறமை மேலாண்மை, திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் புதுமையான அணுகுமுறையுடன் செயல்படும் நிறுவனமாக இது வளர்ந்துள்ளது. திரைப்படத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் பெற்ற அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் திரையரங்குகள் மீண்டும் உயிர்ப்பிக்க இந்தப் படம் முக்கியப் பங்காற்றியது. இது திரையுலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பதிவானது. 2023-ல் ‘லியோ’ (#Thalapathy67) படத்துக்கு சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்டோருடன் இணைந்து தயாரிப்பாளராகவும் ஜெகதீஷ் பழனிசாமி பங்களித்தார். விடாமுயற்சி, கடின உழைப்பு, புதுமை ஆகியவற்றின் மூலம் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே தனது நோக்கம் என்று அவர் கூறி வருகிறார்.
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே அவருக்கு நெருக்கமான ஆதரவாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமியின் நியமனம், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திரையுலக அனுபவத்தையும், அரசியல் திட்டமிடல் திறனையும் இணைத்து செயல்படும் அவரது பணி, முதலமைச்சரின் அலுவலக செயல்பாடுகளுக்கு புதிய ஆற்றலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!