தடைகளை கடந்து திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!
ஒட்டுமொத்தத் தமிழகத் திரைத்துறையும் ரசிகர்களும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்து இருந்தனர்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. முழுவதுமாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், இனி முழுநேரப் பொதுவாழ்வில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், இதன் காரணமாக இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன் விளைவாக, அவரது திரைப்பயணத்தின் மிக முக்கியமான மற்றும் இறுதிப் படைப்பாகக் கருதப்படும் இந்தப் படம், திரைக்கு வருவதற்கு முன்பாகவே சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகக் கடுமையான எதிர்பார்ப்புகளையும் ஆவல்களையும் தூண்டி இருந்தது.
திரையுலகில் பல தசாப்த காலங்களைக் கடந்து வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த அவரது கடைசிப் படம் என்பதால், ஒட்டுமொத்தத் தமிழகத் திரைத்துறையும் ரசிகர்களும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்து இருந்தனர். இன்று காலை சரியாக 9 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆனது. இந்திய அளவில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களிலும், உலகம் முழுவதும் 8,000 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆன நிலையில், கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் ரி்லீஸ் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களான தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என படத் தயாரிப்பு குழு சட்டப் போராட்டம் நடத்தியது.
இன்னொரு பக்கம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை 1.2 கோடி பேர், ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜனநாயகன் திரைப்படம் வெளியாக நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் அதிகமானது. ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் சென்னை அடையாறில் உள்ள என்எப்டிசி பிரிவியூ தியேட்டரில் நேற்று ஜூலை 22-ந் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.ஜனநாயகன் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக நேற்று இரவு முதலே பெரும் எண்ணிக்கையில் கூடிய விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் பெண்களுக்கான சிறப்பு காட்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் ஒரு பக்கம் விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் விடிய விடிய ‘ஜனநாயகன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!