"அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!" எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!
மருத்துவத் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு விழாவில் அட்ரஸ் இல்லாத தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் அமைச்சர் அருண்ராஜை நிருபர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஆனால், விழா நிறைவில் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பெட்டிகள் தொடர்பாக எழுந்த பெரும் சர்ச்சை நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையே திசைதிருப்பியது.
2026-27ஆம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை கீழ்ப்பாக்கம் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுத் தரவரிசை முடிவு செய்யப்பட்டது.
செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குத் துறை சார்பில் சிற்றுண்டிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அந்தப் பெட்டிகளில் தயாரிப்பாளர் முகவரி (Manufacturer Address), உணவு தயாரிக்கப்பட்ட நேரம், காலாவதியாகும் தேதி (Expiry Date) உள்ளிட்ட எவ்வித அத்தியாவசிய விவரங்களும் இன்றி வெறும் வெள்ளை நிறப் பெட்டியில் உணவு வழங்கப்பட்டது கண்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் இருப்பதாகக் குற்றம்சாட்டிய செய்தியாளர்கள், மக்கள் நல்வாழ்வு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகத்திலேயே இத்தகைய அலட்சியப்போக்கு நிலவுவது குறித்துச் சலசலப்பில் ஈடுபட்டனர்.
'பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய சுகாதாரத் துறையின் நிகழ்ச்சியிலேயே முகவரியற்ற, தரமற்ற உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டது ஏன்?' என்றும், 'இதற்கு யார் பொறுப்பு?' என்றும் அமைச்சரை நேரில் முற்றுகையிட்டுப் பத்திரிகையாளர்கள் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உணவுப் பாதுகாப்பு விதிகளையே காற்றில் பறக்கவிடும் வகையில் அரசு அலுவலகத்திலேயே முகவரியற்ற உணவு விநியோகிக்கப்பட்டது குறித்த காணொலிகள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!