×
 
☰

பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

பழனி நில மோசடி விவகாரத்தில் சார்பதிவாளருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் தொடர்பான மோசடி வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜூலை 6 ஆம் தேதி இந்த நிலம் வெறும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு தனியார்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தப் பதிவு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் அப்போது பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை சம்பந்தப்பட்ட முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமாக அடங்கியுள்ளனர். பத்திரம் தயாரித்ததில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சாதாரணமாக பழனி சார்பதிவாளர் விடுப்பில் இருந்த நாளில் கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இந்தப் பத்திரப்பதிவு நடைபெற்றதாகத் தெரிகிறது. முன்னதாக வேறு அலுவலர் ஆவணத்தை நிலுவையில் வைத்திருந்தபோதிலும், ஜஸ்டின் மணிகண்டன் அதை முடித்துப் பதிவு எண் அளித்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது. கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து இந்தப் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட பதிவாளரும் இதே விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை இறுதியில் முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

நீதிமன்றம் முதலில் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி, அவர் தினசரி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி அவர் பல நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார்.ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே தொலைபேசித் தொடர்புகள், சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. பத்திரப்பதிவுக்கு முன்னும் பின்னும் அதிகாரிகளுக்கும் பிறருக்குமிடையே தொடர் தொடர்புகள் இருந்ததாகவும், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வலியுறுத்தியது.இதையடுத்து உயர்நீதிமன்றம் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இடைக்கால ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது. 

 

இதையும் படிங்க: "உத்தமன் போல் உருட்டிய டம்மி டாடி"..! கேள்வி கேட்டால் பதுங்குவீர்களா.? திமுகவை வெளுத்த தவெக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share