ஜனவரி 18-ல் தமிழகம் முழுவதும் கலை சங்கமம்! வாகை சந்திரசேகர் அறிவிப்பு!!
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் வரும் 18-ஆம் தேதி 'கலைச் சங்கமம்' விழா நடைபெறும் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நலிந்த மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஜனவரி 18-ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘கலைச் சங்கமம்’ நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அலுவலகத்தில், அதன் தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிட்டனர்.
வரும் ஜனவரி 18-ஆம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தலா 100 கலைஞர்களைக் கொண்டு கலைச் சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ₹2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் வரும் ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும். கடந்த முறை 3 ஆண்டுகளுக்குச் சேர்த்து 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள இரு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! எடப்பாடி பழனிசாமியின் திருவள்ளுவர் தின வாழ்த்து..!!
நலிவுற்ற நிலையில் வாழும் 2,500 கலைஞர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்க ₹9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயல் இசை நாடக மன்றத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதி ₹3 கோடியிலிருந்து ₹4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாகை சந்திரசேகர் பேசுகையில், பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இந்த மாவட்ட ரீதியான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது எனத் தெரிவித்தார். தமிழகத்தின் கலை மரபுகளைப் பாதுகாக்கவும், கலைஞர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் கலை உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: விஜய்யின் மாஸ் மூவ்! பிரசாரக் குழுவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட 10 பேர் நியமனம்!