கலைஞர் சிலை மீது கருப்பு பெயிண்ட்.. குவிந்த திமுகவினர்.. சேலத்தில் பரபரப்பு..!
சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் அடித்துச் சென்றதால் பரபரப்பு
சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பூங்கா நுழைவாயிலில் முத்தமிழறிஞர் கலைஞர் , எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகள் அடுத்தடுத்து உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 16 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் மீது நள்ளிரவில் சிலர் கருப்பு பெயிண்ட் அடித்துச் சென்றுள்ளனர். குறிப்பாக சிலையின் வேஷ்டி அணிந்த பகுதியை கருப்பு பெயிண்டால் பூசியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை கேள்விப்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சிலை அமைந்துள்ள பகுதியில் திரண்டுள்ளனர்.
மேலும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். சிலையின் கீழே பெயிண்ட் டப்பா ஒன்றும், பெயிண்ட் நனைக்கப்பட்ட துணி ஒன்றும் கிடந்தது. இதனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலைஞர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பார்லிமென்டில் கால் பதிக்கும் கமல்...பதவியேற்பு தேதியை உறுதி செய்த மநீம!
இதையும் படிங்க: பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!