கமல் கேள்விக்கு கட்காரி பதில்! ராஜ்யசபாவில் சுவாரஸ்யம்! எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு?
ராஜ்யசபாவில் நடிகர் கமல் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன், திமுக கூட்டணியின் ஆதரவுடன் கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 19) நிறைவடைந்த நிலையில், மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து கமல் ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்வி மத்திய அரசின் E20 எத்தனால் கலப்பு எரிபொருள் திட்டம் குறித்தது. தற்போது பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கப்படும் நிலையில், அதை 20 சதவீதமாக உயர்த்தும் E20 திட்டத்தால் வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கமல் ஹாசன் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலாவதாக, E20 எரிபொருளால் வாகனங்களின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். இரண்டாவதாக, பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது ஏன் நிறுத்தப்பட்டது, அதை மீண்டும் கொண்டுவர திட்டம் உள்ளதா என்று வினவியுள்ளார். மூன்றாவதாக, E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்! பாஜக குறிவைக்கும் 50 தொகுதிகள் லீக்!! தலைமை ஒப்புதலுக்கு சென்ற பட்டியல் இதோ!
இந்தக் கேள்விகளுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். E20 எரிபொருள் குறித்து வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளையும் கள சோதனைகளையும் நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைகளில் E20 எரிபொருளால் வாகனங்களின் செயல்பாடு, எஞ்சின் தேய்மானம் அல்லது செயல்திறன் ஆகியவற்றில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பழைய வாகனங்களிலும் இதே முடிவு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், வாகனத்தின் முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம், ஏசி பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது என்றும் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் பெட்ரோல் இறக்குமதி செலவைக் குறைக்கும், விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு எழுப்பிய முதல் கேள்வி மக்களின் நலனுடன் தொடர்புடையது என்று கமல் ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வாகன ஓட்டிகள் பலர் E20 எரிபொருள் குறித்து கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அமித்ஷா செயல்பாடுகளில் அதிருப்தி!! பாஜகவுக்கு எதிராக திரும்பிய ஓபிஎஸ்! தவெகவுக்கு ரூட்டா?