திருச்சியை 2வது தலைநகரமாக்கனும்..! கனிமொழியிடம் முக்கிய கோரிக்கை மனு கொடுத்த துரை வைகோ..!
6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழியிடம் துரை வைகோ வழங்கினார்.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்று இருந்தாலும், அது மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பதால், தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அரசு அலுவலகங்கள், உயர் அதிகாரிகளைச் சந்திப்பது, முக்கிய கோப்புகளைப் பெறுவது என்று எல்லாமே ஒரு பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை காலந்தோறும் எழுந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கோரிக்கைக்கு மிக முக்கியமான அடிப்படை காரணம் திருச்சியின் புவியியல் நிலை. தமிழகத்தின் சரியான மையப் புள்ளியில் திருச்சி அமைந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பயணிக்கும் போது எல்லோருக்கும் சம அளவில் அணுகக்கூடிய இடம் இது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆனால் திருச்சியை மையமாக வைத்தால் அனைத்து பகுதிகளுக்கும் சமமான தொலைவு இருக்கும். இதனால் நிர்வாக ரீதியாக மிகப் பெரிய சமநிலை ஏற்படும் என்பது பலரது கருத்து.இந்தக் கோரிக்கை புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது காலத்தில் இதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அரசியல், சமூகக் காரணங்களால் அது முழுமையாக நிறைவேறவில்லை.
இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய வழக்கு…! வாதாட வைகோ ஆஜர்..!
அதன் பிறகு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை அவ்வப்போது முன்வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழியை சந்தித்து 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை எம்.பி. துரை வைகோ அளித்துள்ளார். குறிப்பாக திருச்சியை 2வது தலைநகரமாக அறிவிப்பது, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவற்றை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சாதி வன்மம்... அமைச்சர் மூர்த்தி உருவபொம்மை எரிக்க முயற்சி... மதுரையில் பதற்றம்..!