சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!
சட்டசபை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது என்று கனிமொழி எம்பி விமர்சனம் செய்தார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய நடைமுறைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்திய சட்டப்பேரவை அமர்வில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை முன்னிறுத்தி அவர் பேசியுள்ள இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அவரது கருத்துப்படி, வரலாற்றைப் பேச வேண்டுமானால் நீதிக்கட்சி காலத்திலிருந்தே தொடங்க வேண்டும். தமிழ்ச் சமூகத்திற்காக திமுக செய்த பங்களிப்புகளிலிருந்து விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆகியோருக்கு அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டார். தலைவர் கலைஞர் மற்றும் திமுக மீது அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாகக் கருதும் போக்கு இன்னும் எத்தனை காலம் தொடரும் என்று கேள்வி எழுப்பிய அவர், எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் பேச ஒரு கூட்டமும் இருந்துகொண்டே இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுக்கப்பட்டதைப் படிப்பதைத் தவிர கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தியதாகவும், எதிர்வினை வருமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்ததாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவாதத்திற்குப் பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது மிகக் குறைவே என்றும், மற்றவை அனைத்தும் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும் சமீபத்திய வாட்ஸ்அப் ஃபேக்டரி பொய்களையும் கலந்து தயாரிக்கப்பட்ட பிரதியைப் படித்ததாகவே தோன்றுகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!
சட்டம் ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டிய சபை இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுவதாகக் குறிப்பிட்ட அவர், “Not everything loud is true” என்ற ஆங்கில வாசகத்தை மேற்கோள் காட்டி முடித்தார்.
இதன் மூலம் சத்தமாகப் பேசுவதால் மட்டும் எதுவும் உண்மையாகிவிடாது என்பதை வலியுறுத்தினார்.தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி, சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் அதன் உண்மையான நோக்கத்தையும் நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வு தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்குப் பதிலாக அவதூறுகளும் பழைய குற்றச்சாட்டுகளும் மேலோங்கி நிற்பதாக அவர் கருதுகிறார். இந்தப் பின்னணியில் சட்டப்பேரவை உண்மையான ஜனநாயக மன்றமாகச் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற தலைவர் கொலை... யாருக்கும் பாதுகாப்பில்லை.! தவெக அரசை கண்டித்த கனிமொழி.!!