×
 
☰

அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

உதயநிதியால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதப்படும் மூத்த நிர்வாகிகள் சிலர் கனிமொழியின் பக்கம் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் அதிகார மையத்தில் வெடித்துள்ள அரசியல் பூகம்பம், கட்சியின் அடித்தளத்தையே அதிர வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையே பல நாட்களாகத் திரைமறைவில் நிலவி வந்த அதிகாரப் போட்டி, தற்போது அரசியல் திருப்பங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி அணி, கனிமொழி அணி என இரு தரப்பாகப் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி இருந்த காலத்தில் திமுகவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த கனிமொழி, தனது ஆதரவாளர்களுக்குச் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் அளவுக்குச் செல்வாக்குடன் இருந்தார். ஆனால், மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கனிமொழியின் செல்வாக்கு சற்றுச் சரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், கனிமொழியின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பல மூத்த நிர்வாகிகள் அணிமாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, உதயநிதியைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனிமொழி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: திருவொற்றியூரில் 5 வயது சிறுமி வன்கொடுமை..! "சிங்கப்பெண் படை"..! வெளுத்துவிட்ட கனிமொழி எம்.பி.!

குறிப்பாக, திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இளைஞரணியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, கட்சியின் அமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதயநிதி முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக நியமிக்கப்படக் கூடாது என்றும், முறையான உட்கட்சித் தேர்தல் நடத்தி ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கனிமொழி தரப்பு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உட்கட்சிப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரந்தாமனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தமிழன் பிரசன்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உதயநிதி பரந்தாமனை மதுராந்தகம் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி நிர்வாகி மாணிக்கவாசகத்தின் மனைவி சுகன்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், வேட்பாளர் தேர்வு தொடர்பான உட்கட்சிப் பூசல்களும், தன்னிச்சையான முடிவுகள் குறித்த அதிருப்தியும் இணைந்ததால், இந்த இரு தொகுதிகளிலும் திமுக தோல்வியைச் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உதயநிதியின் நேரடி ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட இரு வேட்பாளர்களும் தோல்வியடைந்தது, அவரது தரப்பின் அரசியல் செல்வாக்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், கனிமொழி தரப்புக்கு இது சாதகமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உதயநிதியால் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதப்படும் மூத்த நிர்வாகிகள் சிலர் கனிமொழியின் பக்கம் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு சேகர்பாபுதான் காரணம் என உதயநிதி தரப்பு கருதுவதால், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த சேகர்பாபு, கனிமொழிக்கு நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் வெளிப்பாடாக, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவைச் சேகர்பாபு முன்னின்று பிரம்மாண்டமாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. உதயநிதி தரப்பால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் சேகர்பாபு, இந்த நிகழ்ச்சியில் கனிமொழியுடன் இணைந்து செயல்பட்டது, கட்சித் தலைமைக்கு அரசியல் ரீதியான செய்தியை உணர்த்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவின் உள்கட்டமைப்பில் உதயநிதி மற்றும் கனிமொழி தரப்புகளுக்கு இடையே உருவாகியுள்ளதாகக் கூறப்படும் அதிகாரப் போட்டி, சாதாரண கருத்து வேறுபாட்டைக் கடந்து, கட்சியின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிக்கும் விவகாரமாக உருவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.

தேர்தல் பின்னடைவுகள், மேடைகளில் வெளிப்படும் அதிருப்தி மற்றும் கட்சிக்குள் உருவாகும் புதிய அணிச் சேர்க்கைகள் ஆகியவை திமுக தலைமைக்குச் சவாலாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், உட்கட்சிப் போட்டிகளும் புதிய அரசியல் நகர்வுகளும் திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share