விடிந்ததுமே கர்நாடகாவுக்கு காத்திருந்த ஷாக்... ஆடிப்பெருக்கில் தமிழகத்திற்கு ஓடோடி வரும் காவேரி...!
காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போதைய நிலையில் தங்களின் குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைப்பது அவசியம். தண்ணீர் கோரி தமிழகத்திடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ள போதும் கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனே முக்கியம் என கர்நாடகா அரசு முடிவெடுத்திருந்தது.
ஆனால் மனிதர்களை விட வலிமையானது என்பதை இயற்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கர்நாடகால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினியில் அதிக நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளுக்கும் நீர்வரத்து இன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே மோதல் முற்றி வந்தது.
இந்நிலையில், ஜூலை 31 ஆம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2,000 கனஅடி உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 27,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள இந்த காவிரி நீர், இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 32,000 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?
இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!