×
 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்பு! ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் தாவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநில ஆளுநர் தாவார்சந்த் கெலாட் உறுதிப்படுத்தியுள்ளார். 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதிலிருந்து முதல்வர் பதவிக்கான அதிகாரப் போட்டி சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நீடித்து வந்த நிலையில், இப்போது அது முடிவுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் உயர்மட்ட அழுத்தத்தின் காரணமாக நேற்று சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகையில் சமர்ப்பித்தார். மூன்று ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அவர் பதவி விலகியுள்ளார். ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சித்தராமையா இடைக்கால முதல்வராகத் தொடர்வார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே, கட்சி தரப்பில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க முன்வந்தபோது அதை ஏற்க மறுத்த சித்தராமையா, “மாநில அரசியலிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தப் போகிறேன்” என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: சித்தராமையா காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் மரியாதை! கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு முன் ஆசி!!

ஆளுநர் தாவார்சந்த் கெலாட் சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் ராஜினாமா நிலை குறித்த தகவல்கள் முதலில் வெளியாகாமல் இருந்தன. பின்னர் அவர் திரும்பியதும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். துணை முதல்வர் டிகே சிவகுமார் விரைவில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா காங்கிரஸில் நீண்டகாலமாக நிலவி வந்த உள் மோதல் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 2023 தேர்தலுக்கு முன்பிருந்தே சித்தராமையா - டிகே சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமாக இருந்தது. இறுதியில் கட்சி உயர்மட்டம் தலையிட்டு இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றம் கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிகே சிவகுமார் முதல்வரானால், கட்சியின் இளைய தலைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. மறுபுறம், சித்தராமையா தொடர்ந்து மாநில அரசியலில் செயல்படுவார் என்பதால், எதிர்கால அரசியல் சமன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: சித்தராமையா காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் மரியாதை! கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு முன் ஆசி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share