கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநில வனப்பகுதி அருகே அப்பாவித் தமிழர்கள் மீது அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவித் தமிழர்கள் மூவர் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், சொல்லொணா வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பன்னெடுங்காலமாக எல்லைப்புற வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், கால்நடைகளை மேய்த்தும் தங்களது எளிய வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அப்பாவி மக்கள் மீது கொடூரமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை அம்மாநில வனத்துறைக்கு யார் வழங்கியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படுகொலையைக் கண்டித்து அப்பகுதி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நீதிக்காகப் போராடி வரும் சூழலில், 'மான் வேட்டையாடியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம்' என கர்நாடக வனத்துறை அளித்துள்ள விளக்கம் முற்றிலும் நம்பகத்தன்மையற்றது என்றும், அதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!
எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த அத்துமீறிய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை ஆணையம் அமைத்து, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தமிழக முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?