கருணாநிதியின் 7வது நினைவு நாள்.. திமுக சார்பில் அமைதி பேரணி அறிவிப்பு..!!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7வது நினைவு தினமான வரும் 7ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 7-வது நினைவு நாளையொட்டி, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணி சென்னை அண்ணா சாலையிலுள்ள ஓமந்தூரார் அரசு வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலையிலிருந்து தொடங்கி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடையும்.
காலை 7 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணியில், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார். பேரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், மூத்த தலைவர்களும் கலந்துகொள்வர்.
இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்..!!
கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், மாவட்டங்கள் மற்றும் கிளைகளில் அவரது புகழ் ஓங்குவதற்கு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். கருணாநிதி, தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர். திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும், தமிழ் இலக்கியம் மற்றும் திரைப்படத் துறையில் முத்தமிழறிஞராகவும் விளங்கியவர். இந்த அமைதிப்பேரணி, அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, திமுகவின் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் உறுதியை வெளிப்படுத்தும்.
மேலும் இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தகைமைசால் தலைவராக - எழுத்தாளராக - கவிஞராக -சொற்பொழிவாளராக -திரைக்கதை வசனகர்த்தாவாக -இலக்கியவாதியாக - திரைப்படத் தயாரிப்பாளராக தலைசிறந்த நிர்வாகியாக - தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக - உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அமைதி பேரணி நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்- முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி.. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!